Abusalihonline's Blog

Just another WordPress.com site

பெண் குழந்தைகளை காப்போம்

பெண் குழந்தைகளை காப்போம் 
உலகில் கண்திறந்த மூன்று மாதங்களுக்குள் மற்றொரு பெண் குழந்தையும் இந்த தேசத்தின் கண்மூடி பழக்க வழக்கத்தினால் மண் மூடிப்போனது. மற்றொரு தந்தை தனது விரக்தியையும் கையாலகாத்தனத்தையும் நினைத்து நினைத்து மருகி தனது பெண் குழந்தையை முட்டாள் தனமாக கொன்று விட்டான் .

யாரும் உதவுவாரற்ற அந்த பெண் குழந்தையின் தாய், குழந்தையின் கோர மரணம் குறித்து அரற்ற மட்டுமே முடிந்தது.பெங்களூருவை சேர்ந்த மூன்று மாத பெண் குழந்தை ஆப்ரீன் பெற்ற தகப்பனால் சிகரட்டால் சூடு வைக்கப்பட்டு வெறித்தனமாக காயங்கள் ஏற்படுத்தப்பட்டு குதறப்பட்டு கொல்லப்பட்டாள். இது இந்நாட்டு பெண் குலத்தின்மற்றொரு துயரக்கதை அவ்வளவுதான் என இந்த தேசம் மறந்து தொலைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பி சென்று விடும் கொடுமைதான் நிகழ்வுகளில் மிக கொடுமையானது 

தலையில் ஏற்பட்ட கொடிய காயம் ,முறிந்து போன கழுத்து, சிகரெட்டால் சூடு போடப்பட்ட அடையாளங்கள் , தந்தை என்ற பெயரில் உலவிய மிருகம் கடித்து,கடித்து,உடலெங்கும் அடையாளங்கள் என சித்திரவதைகளை அனுபவித்த பிறந்து மூன்றே மாதங்களான அந்த சிசு என்ன மாதிரியான ? ஒரு நாட்டில் , சமூக அமைப்பில் நாம் பிறந்து தொலைத்து விட்டோம் என வேதனையில் நெஞ்சு வெடித்ததோ ? என்னவோ ? மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களில் மாரடைப்பால் மரணமடைந்தது. 

ஆப்ரீனை பெற்றெடுத்த தாய் 19 வயது ரேஷ்மா ,அவர் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை விவரித்த போது திருமணம் நடந்த புதிதில் வரதட்சணை கொண்டு வரவில்லை என்பதற்காக தனக்கு விஷம் ஊட்டி தனது கணவர் கொல்ல முயன்றதாக அச்சத்துடன் கூறியுள்ளார். தன்னை கொடுமை படுத்தியபோது சகித்துக்கொண்ட அந்த இளம் தாய் தனது மழலை கொடுமைபடுத்தப்பட்டபோது பெங்களூரு குழந்தைகள் உரிமை அமைப்பினை அணுகி உதவி கேட்டார். ஆனால் அங்கிருந்து உதவி வந்து சேர்வதற்குள் அவருக்கும் அவரது குழந்தைக்கும் உதை தான் கிடைத்தது. குழந்தை பிணமானது தாய் நடை பிணமானாள்.
இந்த துயர சம்பவம் நிகழ்ந்து சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு (மார்ச் 16 )இரண்டு வயது பாலக் என்ற குழந்தை சமூக விரோதிகளால் வன்கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பலனின்று டெல்லியில் அகில இந்திய அறிவியல் மருத்துவ கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாள்
ஆப்ரீனுக்கும் பாலகுக்கும் நிகழ்ந்த கொடுமைகள் இன்று உலகம் முழுவதும் அறியும் வண்ணம் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டன. ஆனால் அந்த குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரங்களை அறிந்து கொண்டு இருந்த நிலையில் இந்திய சமூகத்தால் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையிலே இருந்தது.
இந்நாட்டில் பல லட்சம் பெண்குழந்தைகள் கொல்லப்பட்டு வருவது இன்னும் தொடருகிறது .மத்திய பிரதேசம் குவாலியரில் பிறந்து இரண்டே நாள் ஆன பெண் குழந்தை தந்தையால் நிகோடின் ஊட்டப்பட்டு கொல்லப்பட்டாள் பெண் குழந்தைகளின் மீதான வெறுப்பு இந்த சமூகத்தில் பெருக பெருக பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. 
கருவில் இருப்பது பெண் என்பது முன் கூட்டியே ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருக்கலைப்பு போக்கு அதிகரித்ததால் இன்று ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற நிலைக்கு பெண்களின் தொகை கீழே சென்று விட்டது. 
பெண்கள் கருவில் கொலை செய்யப்படுகிறார்கள். பெண்ணாக பிறந்து தொலைத்து விட்டதே ? என்ற அறிவீன வெறியில் பெற்ற தந்தையால் கொல்லப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பள்ளி பருவத்தில் துள்ளி செல்லும் இளம் சிறுமிகள் முதல் கல்லூரி செல்லும் கட்டிளம் குமரிகள் வரை போக்கிலி குணம் கொண்ட ஆண்களால் வன்பகடி (ஈவ் டீசிங் )செய்யும் கொடுமையும் அதிகரித்து வன்பகடி வெறி முற்றி உயிர்கள் இழக்கும் அவலமும் தொடரத்தான் செய்கிறது. இத்தனை கண்டங்களை தாண்டி மணம் முடிக்கும் தருணத்தில் வரதட்சணை கொடுமை பூதாகாரமாக்கப்பட்டு ஸ்டவ்களும் கேஸ் சிலிண்டர்களும் வெடிக்கின்றன வரதட்சணை அபாயத்தில் இருந்து தப்பித்தாலும் அதன்பிறகு குடும்பங்களில் நிகழும் குடும்ப வன்முறை போன்றவைகளும் பெண் குலத்தை காவு வாங்கு கின்றன. இன்றைய இந்தியாவில் மாதர் சமூகம் பல்வேறு முனைகளில் குறிவைக்கப்படுகிறது . இதில்பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை மறுக்க முடியாது. 
உலகில் எந்த நாட்டிலும் காண முடியாத அபூர்வ காட்சிகளை இந்திய திருநாட்டில் காணமுடியும் ஆம் இங்குதான் குடியரசுத்தலைவர் , மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவர் , நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்,நாடாளுமன்ற சபாநாயகர் , இரண்டு மாநில முதல்வர்கள் என மங்கையர் திலகங்களை உயர் பொறுப்பில் வைத்து அழகு பார்க்கும் இந்நாடு பெண்கள் மீதான வன்கொடுமைகளை மன்னிக்கபோகிறதா?

Advertisements
Comments Off on பெண் குழந்தைகளை காப்போம்