Abusalihonline's Blog

Just another WordPress.com site

மாமன்னர் பகதூர்ஷாவின் இறுதி நாட்கள்

மாமன்னர் பகதூர்ஷாவின் இறுதி நாட்கள்

இந்தியத் திருநாட்டின் முதல் விடுதலைக்கு வித்திட்ட பெருமகன் முகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் மக்களால் என்றும் நன்றியுடன் நினைவு கூறப்படுபவர்.

நாட்டின் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய அந்த வீரத்தியாகியின் இறுதி நாட்களையும், அவரது குடும்பத்தினரின் இறுதி நாட்களையும் நாம் வரலாற்றின் ஒளியில் பார்த்தோமானால் நமது சுதந்திரம் எத்தகைய வீரத்தியாகிகளால் விளைந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். மேலும் அத்தகைய உயிர்த்தியாகம் செய்த தேசத்தலைவர்களுக்கு நாம் என்ன செய்தோம்? அவர்கள் அரும்பாடுபட்டு ஈட்டித்தந்த உரிமையைப் பாதுகாக்கிறார்களா?

குடிகாரர்களாலும், மதுபான நிறுவனங்களாலும் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்களில் அந்த ஆட்டங்களுக்கு இடையே ஆடும் ஆட்டக்காரிகளின் நடனங்களிலும் மயங்கி, கிறங்கி கிடக்கிறது இளைஞர் சக்தி. இந்த ஆட்டங்கள் அதன் முடிவுகள் அனைத்தும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டவை என்பது போன்ற விவரங்கள் தெரியாமலே இன்றைய இளையதலைமுறையினர் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களிலும் திரை அரங்குகளிலும் தங்களது சிந்தனையை, ஆற்றலை பறிகொடுக்கும் அவலத்தை யாரிடம் போய் நொந்து கொள்வது. முதல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை வகித்த மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபரின் இறுதி நாட்கள் நிகழ்வுகள் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்தையும் உருக்கும். 1857 மே மாதம் 11ஆம் தேதி மீரட் நகரில் பிரிட்டிஷ் படையில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் குதித்தனர்.

300 இந்திய தரைப்படை வீரர்கள் ஆங்கிலேயரை திருப்பியடித்து, திமிறியெழுந்து தலைநகர் டெல்லி நோக்கி புறப்பட்டனர். 82 வயதான உடல்நிலை நலிவுற்றிருந்த பழுத்த பழமாய் காட்சியளித்த முகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் அவர்களை தங்களின் தலைவராகவும் மன்னராகவும் அறிவித்தனர். (ஆதாரங்கள் The Lost Mughal, 2006 -& William Dalrymple, A.G.Noorani, Indian Political Trails 1775&1947)) வரலாற்றாசிரியர் ஏ.ஜி.நூரானி இதுபற்றி தனது நூலில் பகதூர்ஷா ஹிந்து, முஸ்லிம் என்ற இரு சமூகங்களின் ஒற்றுமையின் சின்னமாகவும், ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியின் சின்னமாகவும் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார்.

மேலும் லட்சோபலட்சம் இந்தியர்களின் நம்பிக்கையாகவும், மதிப்புக்குரியவராகவும் உருவெடுத்தார். அதற்கு மாமன்னரை தலைமையேற்க அழைத்தது டெல்லி நோக்கி திரண்ட லட்சக்கணக்கானவர்களின் பேரணியே சிறந்த சாட்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 1857ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீரட் மற்றும் பரக்பூரில் முதல் இந்திய விடுதலைப் போர் வெடித்தது. அந்த சுதந்திரப் போராட்டத் தீ லக்னோ, அலஹாபாத், காஜியாபாத், டெல்லி, கான்பூர், ஜான்சி, குவாலியர், பரேலி, மதராஸ், பாம்பே, பஞ்சாப்பின் சில பகுதிகளிலும் திக்கென பற்றிப் பரவியது.

நானாசாகிப், தாந்தியா தோப்பே, பஹ்த்கான், அஜிமுல்லாகான், ராணிலக்குமிபாய், பேகம் ஹஸரத் மஹல், குன்வார்சிங், மவ்லவி அஹ்மதுல்லாஹ், பஹதூர்கான், ராவ்துலாராம், பஞ்சாபில் விடுதலைப் போருக்கு முக்கியக் காரணமாக திகழ்ந்த ராஜா நகார்சிங் ஆகியோரும் பகதூர்ஷாவின் தலைமையின் கீழ் அணிவகுத்தனர்.

நான்கு மாதங்களில் முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்டது. இரும்புக்கரம் கொண்டு விடுதலைப் போராட்டம் ஆங்கிலேயர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஏராளமான இளவரசர்கள், கவிஞர்கள், மவ்லவிகள், வர்த்தகர்கள் வெறித்தனமாக வேட்டையாடி கொன்று தீர்க்கப்பட்டனர். தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.

கம்பீர கோட்டைகள், எழில்மிகு பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் அடக்கத்தலங்கள், பூங்காக்கள், முகலாயர் ஆட்சியின் பெருமை கூறும் மாளிகைகள் ஏராளமானவை இருந்த சுவடுகளே இல்லாமல் அழிக்கப்பட்டன. முஸ்லிம்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பலர் நாடு கடத்தப்பட்டனர்.

1857ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி பகதூர்ஷாவை ஆங்கிலேயப் படை சுற்றி வளைத்தது. மறுநாள் ராணுவ அதிகாரி மேஜர் வில்லியம் ஹோட்சன் என்பவன் ஹுமாயூன் கல்லறை முன்பாக பகதூர்ஷாவின் புதல்வர்களான இளவரசர்கள், மீர்ஸா முகல், மீர்ஸா கிஸிர் சுல்தான் மற்றும் பகதூர்ஷாவின் பேரன் மீர்ஸா அபூபக்கர் ஆகியோரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளவரசர்களை ஷெர்ஷாஹ் சூரி அவுட்போஸ்ட் அருகே வெறியன் வில்லியம் கொண்டு சென்றான். காபூலி தர்வாஜா அல்லது லால் தர்வாஜா என்று அழைக்கப்பட்ட அந்த இடத்தில் வைத்து இளவரசர்களின் ஆடைகள் கட்டாயப்படுத்தி அவிழ்க்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு பகதூர்ஷாவின் இரு புதல்வர்களும் பேரரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். முகலாய இளவரசர்கள் கொல்லப்பட்ட அந்த இடம் அதன்பிறகு கூனி தர்வாஜா (கொலை வாசல்) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த அக்கிரமச் செயலைச் செய்த வில்லியம் ஹோட்சன் 1858ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி லக்னோவில் பேகம் ஹோதி பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என்ற பரந்த பூபாகத்தை நான்கு நூற்றாண்டுகளாக ஆண்டுவந்த முகலாயப் பேரரசின் மாமன்னர் பகதூர்ஷா வந்தேறி ஆங்கிலப் படைகளால் கைது செய்யப்பட்டார். பகதூர்ஷா நினைத்திருந்தால் ஆங்கிலேயருடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்கலாம். செல்வ சுகபோகத்தில் இன்றுவரை அவரது வாரிசுகள் திளைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர் அதனை வெறுத்தார். மைசூர் சிங்கங்களான ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு வலுவூட்டியதையும், ஆங்கிலேயரின் அடிவருடிகளாக வாழ்ந்து விண்முட்டும் மாளிகைகளும் இன்றும் வாழும் மைசூர் சாம்ராஜ் உடையார் பரம்பரையையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறதல்லவா?

முதலில் அவர் வாழும் கோட்டையிலேயே அவரை வீட்டுச் சிறையில் வைத்தனர் ஆங்கிலேயர்கள். கவிதையுள்ளம் உள்ள மாமன்னர் பகதூர்ஷாவுக்கு ஒரு எழுதுகோல் வைத்துக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை. கவிதை எழுதும் ஆற்றல் கொண்ட அந்த முகலாயப் பேரரசர் தனது இறுதிக் காலக்கட்டத்தில் இறுதி கவிதை வரிகளை கோட்டைச் சுவர்களில் கரிக்கட்டைகளால் எழுதினார் என்ற செய்தியை, கேட்பவர் நெஞ் சமெல்லாம் ரத்தம் கசியும்.

1858ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பகதூர்ஷா மீதான விசாரணை தொடங்கி அதே ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி முடிவடைந்தது. விசாரணையின் முடிவில் பகதூர்ஷா பார்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 1858ஆம் ஆண்டு பகதூர்ஷாவுடன் அவரது மனைவி ஜீனர் மஹல், அவரது இரண்டு மகன்கள் மிர்ஸா ஜவான் பக்த், மிர்ஸா ஷாஅப்பாஸ், மிர்ஸா ஜவான் பக்தின் மனைவி ஜமானி பேகம் என்ற ரவுனக் ஜமானி மற்றும் மாமன்னரின் பிரியத்துக்குரிய பேத்தியையும் சேர்த்து நாடு கடத்தினர் இரக்கமற்ற ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.

தலைநகர் டெல்லியில் இருந்து கல்கத்தா கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் பகதூர்ஷா குடும்பத்தினரை கடல் மார்க்கமாக பர்மா தலைநகர் ரங்கூன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மகாரா என்ற போர்க்கப்பல் கல்கத்தாவில் இருந்து பகதூர்ஷா குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு ரங்கூன் சென்றடைந்தது. அங்கு பர்மாவின் பிரிட்டிஷ் கமிஷனர் கேப்டன் ஹெச்.நெல்சன் டேவிஸிடம் பகதூர்ஷா குடும்பத்தினர் ஒப்படைக்கப்பட்டனர்.

மன்னரின் குடும்பத்தினர் ஷிவ் டகான் பகோடா அருகில் உள்ள பகுதியில் 4 அறைகள் கொண்டு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு அறையும் வெறும் 16 சதுர அடி பரப்பளவைக் கொண்ட சிறிய அறைகள். ஒரு அறை பகதூர்ஷாவுக்கும், இரண்டாவது அறை ஜவான் பக்த் மற்றும் அவரது மனைவி ஜமானி பேகத்துக்கும், மீதம் இரண்டு அறைகளும் ஜீனத் மஹல் மற்றும் ஷாஅப்பாஸுக்கு என ஒதுக்கப்பட்டன. நான்கு பணியாளர்கள் பகதூர்ஷா குடும்பத்தினருக்கு உதவியாக அனுப்பப்பட்டனர். ஒருவர் சமையலையும், இரண்டாமவர் தண்ணீர் தேவையையும், மற்றொருவர் சலவைக்காரர். மற்றும் துப்புரவுப் பணியாளர் நால்வர் மட்டுமே இவர்களைப் பார்க்க முடியும். பேனாவோ, மையோ, காகிதமோ அவர்கள் கண்ணால்கூட பார்க்க முடியாது.

வெள்ளை ஆட்சியாளர்கள் ஒவ்வொரு கணமும் அஞ்சி, அஞ்சி, அதேநேரம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. ஆம் 1862ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி தனது 87ஆம் வயதில் முகலாயப் பேரரசின் கடைசிப் பேரரசர், விடுதலை இந்தியாவின் முதல் தலைவன் பகதூர்ஷா ஜாஃபர் மரணம் அடைந்தார்.

மாமன்னரைக் கைது செய்து நாடு கடத்தி கொடுமை இழைத்த பிரிட்டிஷாருக்கு அவரது மறைவுச் செய்தியை அறிவிக்கும் துணிச்சல் அறவே இல்லாமல் போய்விட்டது. அவரது மறைவை வைத்து இந்தியாவில் மீண்டும் ஒரு புரட்சி வெடித்தால் தங்களால் எதிர்கொள்ள முடியாது என கலங்கிய ஆங்கிலேயர்கள் மறைவுச் செய்தியை யாருக்கும் சொல்லவில்லை. மாமன்னரின் இறுதி ஊர்வலம் ஒரு வயதான மவ்லவி மற்றும் இரண்டு இளவரசர்கள் ஊர்வலமாக செல்ல நடைபெற்று முடிந்தது. முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மருக்கு சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருந்தார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களோடு மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் உயிர்நீத்த இடத்திற்குச் சென்று உருக்கத்துடன் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

முன்பு ஆட்சி செய்த அதே செங்கோட்டையில்தான் நான் கோலோச்சுகிறேன். மாமன்னர் அவர்களே, உங்களைப் போன்று நெஞ்சுரத்துடன் முதுகு வளையாமல் ஆட்சி செய்ய முடியவில்லையே என்று மனதுக்குள் வெதும்பியிருப்பார்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மியான்மருக்கு சுற்றுப்பயணம் செல்லும் போதெல்லாம் பகதூர்ஷா உயிர்நீத்த இடத்திற்குச் சென்று அவரது தியாகத்தையும், வீரத்தையும் சிலாகிப்பது ஒரு மரபாக மாறியது.

இந்திய தேசிய ராணுவத்தை முதன்முதலில் அமைத்த மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1942ல் பிரகடனம் செய்த ‘டெல்லி சலோ’ என்ற போரை பகதூர்ஷா ஜாஃபர் உயிர்துறந்த இடத்திலிருந்துதான் தொடங்கினார். 1987ஆம் ஆண்டு நவம்பரில் மியான்மருக்கு சுற்றுப்பயணம் செய்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மாமன்னர் பகதூர்ஷா குறித்து அவர் உயிர்நீத்த இடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘‘மாமன்னர் அவர்களே, நீங்கள் இந்தியாவில் உங்களுக்கு என்று நிலத்தை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்தியாவே உங்கள் பெயரையும், தியாகத்தையும் மெய்சிலிர்ப்புடன் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. விடுதலை உணர்வின் அடையாளச் சின்னமான பகதூர்ஷாவின் புகழ் என்றும் வாழும்’’ எனக் குறிப்பிட்டார்.

பகதூர்ஷா ஜாஃபர் என்ற பெயர் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் உணர்ச்சிமிகு உத்வேகத்தை வழங்குகிறது என்பதை மறுப்பார் யாரும் உண்டா?

-அபுஸாலிஹ்

Advertisements
Comments Off on மாமன்னர் பகதூர்ஷாவின் இறுதி நாட்கள்