Abusalihonline's Blog

Just another WordPress.com site

குதறப்பட்ட குழந்தைகள் கொலைக்களமான பெஷாவர் பயங்கரவாதத்தின் முன் மண்டியிட்ட பாகிஸ்தான் அபுசாலிஹ்

குதறப்பட்ட குழந்தைகள்

கொலைக்களமான பெஷாவர்

பயங்கரவாதத்தின் முன் மண்டியிட்ட பாகிஸ்தான்

அபுசாலிஹ்

12 வயதில் இருந்து 16 வயதுக்கு இடைப்பட்ட பச்சிளம் பாலகர்கள் 132 பேர் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானின் கைபர் பகுதியின் பெஷாவர் நகரத்தின் ராணுவ பள்ளியில் தெஹ்ரீக் இ தாலிபான் என்ற இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

வடக்கு வஜிர்ஷ்தான் என்ற பாகிஸ்தானின் பழங்குடியின மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஆடிய வெறியாட்டத்திற்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடத்தினோம் என கொலைகாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சோகம் பல இணை கோடுகளை கொண்டது. இது தெற்காசியாவின் மிகப்பெரிய படுகொலைகளில் ஒன்று என்று மட்டும் வகைப்படுத்தி விட முடியாது. எதிரி நாடுகள் கூட பாகிஸ்தானின் இன்றைய நிலை குறித்து மவுன கண்ணீர் வடிக்கும் நிலை .பாகிஸ்தானின் வரலாற்றில் மறக்கவே முடியாத நாளாக டிசம்பர் 16 அமைந்து விட்டது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி பங்களாதேஷ் போரில் இந்தியப்படைகளால் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டது

பங்களாதேஷ் என்ற குட்டி நாடு பாகிஸ்தானுக்கு நீண்டnaal உறுத்தலாக , வாழ்நாள் வலியாக மாறியது. கிழக்கு பாகிஸ்தான் பிரச்சனையை சரிவர கையாளாமல் , அண்டை நாட்டு உறவினையும் சீர் படுத்தாமல் நிலைமை கை மீறி போன நிலையில், அவமானமும் தோல்வியும், விரக்தியும் மேலிட அண்டை நாடுகளின் நிம்மதியை குலைக்கும் வேலையை மும்முரப்படுத்த வேண்டும் என்று கோரும் சக்திகளின் கை பாகிஸ்தானில் மேலோங்கியது. எப்படியாயினும் பாகிஸ்தான் என்ற நாடு தனது சொந்தக் கூறுகளாலே காட்டிக்கொடுக்கப்பட்ட தேசம் என்று கூறினால் அது மிகையன்று.

2007 18 ஆம் தேதி கராச்சியில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 139 பேருடன் குண்டு வெடிப்பில் கொல்லபட்டார். அவர் நீண்ட அரசியல் இடைவேளைக்குப்பிறகு 8 ஆண்டுகள் கழித்து மறு அரசியல் பிரவேசம் செய்த 2 ஆம் மதம் தீர்த்து கட்டபட்டார். 1960 களில் அடங்கி கிடந்த சர்வாதிகார, மத உணர்வு கொண்ட ராணுவ அரசியல் ஜியாவுல் ஹக் அதிபரான போதும் , அவரது மறைவினை தொடர்ந்தும் செழித்து வளர ஆரம்பித்தது. ஆப்கனை ஆக்கிரமித்த சோவியத் படைகளை ஒடுக்க பாகிஸ்தானை அமெரிக்கா களமாக பயன்படுத்த தொடங்கியது.

ஆப்கனை விட்டு சோவியத் துருப்புகள் வெற்றிகரமாக விரட்டப்பட்ட பிறகு இனி ஜியாவுல் ஹக் அவசியமில்லை என்று முடிவு செய்து அமெரிக்க ரகசிய படையினரால், வானில் வெடி குண்டு வைத்து கொல்லப்பட்டார். இனி பாகிஸ்தானில் உள்ள அடாவடி சக்திகள் அடங்கிவிடும் என எதிர் பார்த்து ஏமாந்த அமெரிக்கா தனது நிம்மதியை நிரந்தரமாக தொலைத்தது இங்கே தான் . தான் தொலைத்த நிம்மதியை இந்திய துணைக்கண்டமும் அனுபவித்து தொலைக்கட்டுமே என்ற நோக்கத்தோடு படிப்படியாக தனது ஆக்கிரமித்தலுக்குள் மாட்டிய நாடாக பயணப்பட ஆரம்பித்தது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு இன்றுவரை பாகிஸ்தானில் பயங்கர வாத தாக்குதலுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இனி அடுத்து வரும் சில வாரங்களுக்குப்பிறகு பாகிஸ்தானின் முழுமையான கட்டுப்பாடு போர்ப்படை தளபதி ராஹில் ஷரிப் , ஐ எஸ் ஐ உளவு அமைப்பின் தலைவர் ஜெனெரல் ரிஸ்வான் அக்தர் ஆகிய இருவரின் கைகளிலும் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வெறி பிடித்த மூர்க்க முட்டாள்களின் செயலால் மனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் நிலைக்கு பாகிஸ்தான் நீதி பரிபாலன அமைப்புகள் தள்ளப்படும் பரிதாப நிலை ஏற்படலாம்

பாகிஸ்தானின் பிரச்சனைக்கு அமெரிக்கா ஏன் தீர்வு சொல்லவேண்டும். ? தனது நாட்டு கிளர்ச்சி குழுக்களுடன் நாமே பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்போம் . அமெரிக்காவின் தலையீடு தேவையில்லை என தொடர்ந்து குரல் எழுப்பி அதன் காரணமாக மக்கள் செல்வாக்கை படிப்படியாக பெற்று வரும் இம்ரான் கானுக்கு பெஷாவர் படுகொலைகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகள் குதறப்பட்ட ஆத்திரத்தில் இன்று பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் என குமுறத்தொடங்கியுள்ளனர்.

இந்த அரசியல் , அதிகார வெறி , பயங்கரவாதம் என எதுவுமே எங்களுக்கு தேவையற்றது எங்களை ஏன் குறி வைக்கவேண்டும் . என்ற அரற்றலுடன் குழந்தைகளை பறிகொடுத்தவர்களின் கதறல்கள் பெஷாவர் நகர வீதிகளெங்கும் ஒலிக்கிறது இன்னும் சில நாட்களில் பனிக்கால விடுமுறைகளை கொண்டாடுவோம் என்ற ஆசையுடன் அது பற்றி பேசிக்கொண்டே , கனவு கொண்டு சென்ற பள்ளி குழந்தைகள் உரு குலைக்கப்படுள்ளனர். விடுமுறையை எப்படியெல்லாம் கழிக்கவேண்டும் என திட்டமிட்டு இருப்பார்கள் ? மாமா வீட்டுக்கு , பாட்டி வீட்டுக்கு சென்று விடுமுறையை கழிக்கலாம் என மலர் அரும்புகள் போட்ட குதூகலத்திட்டம் பயங்கரவாதிகளால் சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டது. காலையில் சீருடையுடன் அணிவகுத்த குருத்துக்கள், மாலையில் ஜனாஸா ஆடை போர்த்தப்பட்ட கோலத்தில் பார்க்க எந்த பெற்றோருக்குத்தான் மனம் வரும் ? மனித மனம் கொண்ட எவராலும் அதனை சகித்துக்கொள்ளத்தான் முடியுமா ?

குழந்தைகளைக்கூட கொல்லும் மன நோயாளிகள் இந்த பூமிப்பந்தை விட்டே விரட்டியடிக்கப்படவேண்டும். அது செஞ்சோலையின் ஈழத்தமிழ குழந்தைகளை கொன்றழித்த சிங்கள ,பவுத்த பயங்கர வாதமானாலும் சரி குஜராத்திலும் ஒரிஸ்ஸாவிலும், பச்சிளம் சிறார்களை உயிரோடு கொளுத்தி கொன்ற ஹிந்துத்துவ பயங்கர வாதமானாலும் சரி வான் தாக்குதல் மூலம் ஈராக்கிய , ஆப்கானிய சோமாலிய குழந்தைகளை கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் அமெரிக்க நேட்டோ பயங்கர வதமானாலும் சரி பாலஸ்தீன சிறார்களை மருத்துவமனைகளில் கூட கொண்டு வீசி அளிக்கும் யூத பயங்கரவாத மானாலும் எத்தகைய கொடூர பயங்கரவாதமும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். மானுட சமூகத்தால் புறக்கணிக்க ப்படவெண்டும்.

Advertisements
Comments Off on குதறப்பட்ட குழந்தைகள் கொலைக்களமான பெஷாவர் பயங்கரவாதத்தின் முன் மண்டியிட்ட பாகிஸ்தான் அபுசாலிஹ்