Abusalihonline's Blog

Just another WordPress.com site

விடுதலைப் போராட்ட வீராங்கனை பேகம் ஹஜ்ரத் மஹல்ஆவணப்படம் அபூசாலிஹ் 16 April 2017

on April 16, 2017

விடுதலைப் போராட்ட வீராங்கனை பேகம் ஹஜ்ரத் மஹல்ஆவணப்படம்

அபூசாலிஹ்
16 April 2017

இந்தியா

அவுத் அரசின் கடைசி அரசி பேகம் ஹஸ்ரத் மஹல் முதல் இந்திய விடுதலை போரில் செரு களத்தில் அவர் சாதித்ததையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் சிறைவைக்கப்பட்டதையும் , 20ஆண்டுகளாக வாடியதையும் 138 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திரையிடப்பட்டது.

இதற்கென விடுதலைப் போராட்ட வீராங்கனை பேகம் ஹஸ்ரத் மஹல் குடும்பத்தினர் நேபாளத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். பேகம் ஹஸ்ரத் மஹல் பற்றிய ஆவணப்படம் ஏப்ரல் 7ம் தேதி திரையிடப்பட்டது. இத்தகவலை ஹஸ்ரத் மஹலின் எள்ளுப்பேத்தி (கொள்ளுப்பேத்தியின் மகள்) மன்ஜிலாத் பாத்திமா தெரிவித்தார்.

அவுத் பேரரசர் நவாப் வாஜித் அலிஷாவின் இளைய அரசியான பேகம் ஹஸ்ரத் மஹல் 1857ல் நடந்த முதல் இந்திய விடுதலைப்போராட்டத்தில் வீர தீர சாதனைகளை நிகழ்த்திய போதிலும் ஜான்சியை சேர்ந்த லக்குமிபாய் அளவுக்கு கொண் டாடப்படவில்லை என பாத் திமா தனது மனக்குறையை தெரிவித்தார் நடுநிலையாளர்கள் எல்லோருடைய மனக்குறை கூட அது தான் இல்லையா?

இந்தி ஆவணப் படம்

26நிமிட ஹிந்தி மொழியிலான இந்த ஆவணப்படத்தின் தலைப்பு பேகம் ஹஸரத் மஹல் ஆகும். அவுத் பேரரசின் கடைசி அரசியாக இருந்தாலும் முதல் இந்திய விடுதலைப்போரின் முதல் புரட்சிக்காரிதான் பேகம் ஹஸ்ரத் மஹல் . மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தை முஹியத்தீன் மிர்ஸா இயக்கிய இந்த படத்தை பிலிம் டிவிஷன் தயாரிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த படம் பெட்டிக்குள் முடங்கியதை வெளிக்கொணர பாடுபட்டார் பாத்திமா இளைய தலைமுறையினர் விடுதலைப்போராட்ட வீர பரம்பரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்தம் தியாகம் நினைவு கூறப்படுவதற்காக படத்தை திரையிட செய்தோம் என்கிறார் பாத்திமா.

ஆவணப்படத்தில் ஹஸ்ரத் மஹல் போர்க்களத்தில் வீரத்துடன் களமாடிய சம்பவங்களை இந்திய விடுதலை வீரர்கள் என்ற எம் ஜி அகர் வாலின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டதாக ஆவணப்பட பொறுப்பாளர்கள் கூறுகின்றனர்.

மகாராணியை எதிர்கொண்டவர்

1856ல் அவுத் அரசை பிரிட்டிஷ் அரசுடன் இணைத்த பிறகு மன்னர் வாஜித் அலிஷா நாடு கடத்தப்பட்டார்.வீறு கொண்டெழுந்த அரசி பேகம் ஹஸ்ரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதருக்கு முடிசூட்டி நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் ஆடம்பர வாழ்வு வாழ்ந்த அரசியாக இருந்தபோதும் போர்க்களங்களில் தோன்றி தனது வீரர்களுக்கு உத்வேக ம் ஊட்டுபவராக விளங்கியதாக அந்த நூல் ஆதாரங்களுடன் குறிப்பிட்டது. விடுதலைப்போராட்டத்தில் இந்திய பெண்கள் எனும் கலைக்களஞ்சியம் படைத்த சிம்மி ஜெயின் கூற்றின்படி பிரிட்டிஷ் மஹாராணி விக்ட்டோரியாவுக்கு எதிர்ப்பிரகடனஷ்ம் விடுத்து சவாலாக விளங்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயின் தனது நூலில் புரட்சிக்குப்பிறகு விக்ட்டோரியா மகாராணி இந்திய மக்களை குளிரவைக்கும் விதமாக ஏமாற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீராங்கனை ஹஸ்ரத் மஹல் எதிர் அறிக்கை ஒன்றை மக்களுக்கு வெளியிட்டார். அதில் பிரிட்டிஷ் மஹாராணி அறிக்கையின் நம்பகத்தன்மையையும் உண்மை யையையும் கேள்வி கேட்டார் . பிரிட்டிஷ் ராணியின் அறிக்கைக்கு கடும் சவாலாக விளங்கினார்.

இவரது தலைமையின் கீழ் லக்னோ உட்பட அவத் மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்துக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக உன்னத போராட்டம் நடத்தியது நெகிழ்வான வரலாறாகும். இன்றைய தவைமுறை அதில் கற்க வேண்டிய பாடம் ஏராளம் உள்ளது.

இமாலய மலையடி வாரத்தில் 20 ஆண்டுகள்

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்தபிறகு மகனுடன் நேபாளத்திற்கு தப்பி சென்றார். 1859ல் நேபாளம் சென்ற பேகம் ஹஸ்ரத் மஹல் 20 ஆண்டுகளாக மரணிக்கும் வரை கடும் சிரமத்துடன் அங்கேயே வாழ்ந்து மறைந்தார்,முதல் விடுதலைப்போராட்ட களத்தில அந்நியரை வீரத்துடன் எதிர்த்த முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.

போர்ப்படை திறமை கொண்ட இவரை தம் பக்கம் கொண்டுவர பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்க ஆங்கிலேயர் செய்த தொடர் முயற்சி பலிக்கவில்லை. எதற்கும் ஆசைப்படாத , அடிபணியாத வீராங்கனையாக 1879 வரை வாழந்து மறைந்தார். ரங்கூன் பகதூர்ஷா ஜாபர் இறுதி நினைவுகளை சுமந்து கொண்டு இருப்பது போல் நேபாளத்தின் காத்மாண்டு பேகம் ஹஸ்ரத் மஹல் என்ற வீராங்கனையின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுபடுத்திக்கொன்டே இருக்கும். இந்த ஆவணப் படம் தமிழாக்கம் செய்யப்படுவது காலத்தின் கட்டாயம்